Published Date: November 2, 2025
CATEGORY: CONSTITUENCY
மதுரை விளக்குத்தூண் பகுதியில் கிடந்த ரூபாய் 17.5 இலட்சத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு தகவல் தொழில்நுட்பவியல் எண்மச்சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
மதுரை சிம்மக்கல் பகுதியை சேர்ந்த செல்வமாலினி. இவர், அண்மையில் விளக்குத்தூண் பகுதியில் கிடந்த ரூபாய் 17.5 இலட்சம் ரொக்கத்தை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து அவரது செயலை காவல்துறையினரும் பொதுமக்களும் பாராட்டினர்.
இந்த நிலையில் தகவல் தொழில்நுட்பவியல் எண்மச் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செல்வமாலினி, அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
ஆட்சியர் பாராட்டு: சாலையில் கிடந்த ரூபாய் 17.5 இலட்சத்தை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்ததன் மூலம் செல்வமாலினி சமூகப் பொறுப்பு, நேர்மைக்கு முன்னோதாரணமாக இருந்து மதுரை மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். கணவர் இல்லாத நிலையிலும் தனது மகனை கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்து வரும் சூழ்நிலையில் சாலையில் கிடந்த பெரும் தொகையை பொறுப்புடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்து இருப்பது அவரின் நேர்மை, மனித நேயம், சமூக பொறுப்பு உணர்வுக்கு சிறந்த உதாரணமாகும். பொது இடங்களில் கிடக்கும் பணம் அல்லது பொருட்களை காவல் நிலையத்தில் ஒப்படைப்பது என்பது ஒவ்வொருவரின் சமூக பொறுப்பு. செல்வமாலினியின் நேர்மையான இத்தகைய செயல் சமூகத்தில் நல்ல மதிப்புகளை கொண்டு வரும் சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறது என்றார் அவர்.
Media: Dinamani